தென் கொரியா மற்றும் வடகொரியா இடையே கடந்த சில வாரங்களாக மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், தென்கொரியா எல்லையில் ராணுவத்தைக் குவித்து வருகிறது வடகொரியா.
தென்கொரியா உடனான உறவை முறித்துக்கொள்வதாக அண்மையில் வடகொரியா அறிவித்ததைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவிவருகிறது. பல ஆண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்த இந்த இரு நாடுகளும் கடத்த சில ஆண்டுகளாக நட்பு பாராட்டி வந்தன. இந்நிலையில், அண்மையில் இந்த இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மீண்டும் விரிசல் விழ ஆரம்பித்தது. தங்கள் நாட்டில் இருந்து தப்பிய சிலர் தென்கொரியாவில் இருந்துகொண்டு துண்டுப் பிரசுரங்கள் மூலமாகத் தங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வருவதாக வடகொரியா அண்மையில் குற்றம் சாட்டியது. மேலும், கிம் ஜோங் உன் மற்றும் அவரது ஆட்சியை விமர்சிக்கும் வகையில் சிலர் தென் கொரியாவில் இருந்து ஹீலியம் பலூன்களைப் பறக்கவிடுவதாகவும், வடகொரியாவின் சில ரகசியத் தகவல்கள் தென்கொரியா வாயிலாகக் கசிவதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வடகொரியா சுமத்தியது.
இதனையடுத்து, இருநாட்டு எல்லையில் அமைந்துள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் வடகொரியா ராணுவம் நுழையலாம் என எச்சரித்த கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங், பேச்சுவார்த்தைக்காக சிறப்புத் தூதர்களை அனுப்பும் தென் கொரிய அதிபரின் யோசனை முட்டாள்தனமானது எனவும் விமர்சித்தார். இந்தச் சூழலில், இருநாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்திருந்த பொதுவான தகவல் தொடர்பு அலுவலகத்தை வட கொரியா வெடிகுண்டு வைத்துத் தகர்த்தது. இந்நிலையில் கொரிய எல்லையில் உள்ள டைமண்ட் மவுண்டன் ரிசார்ட் மற்றும் கைசோங் பகுதியில் வட கொரிய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். விரைவில் இப்பகுதியில் ராணுவப் பயிற்சிகள் தொடங்கப்படும் என்றும் வடகொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.