மியான்மர் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆங் சான் சூகி உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்குமாறும் அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டங்களை ஒடுக்க, 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தைக் கொண்டுவந்துள்ள மியான்மர், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகளை மட்டுமின்றி துப்பாக்கிச் சூடும் நடத்தி வருகிறது.
இராணுவத்தின் இந்த தாக்குதலில் மக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று (14.03.2021) போராட்டக்காரர்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் 38 பேர் பலியாகியுள்ளதாக அந்தநாட்டில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இராணுவத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்கள் சீனாவிற்கு சொந்தமான நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள், பாதுகாப்பு கிடங்குகள், உணவகம் என சீனாவிற்கு சொந்தமான 10 கட்டமைப்புகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து மியான்மரில் உள்ளிய சீன தூதரகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘தொழிற்சாலைகள் சூறையாடப்படுகின்றன, பல தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளது.
மேலும் தங்கள் தொழிற்சாலைகளுக்குப் பாதுகாப்பு வேண்டும் என சீனா கேட்ட பிறகு, சீன தொழிற்சாலைகள் தாக்கப்பட்ட பகுதிகளில் இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் ஆட்சியைத் தடுத்து, தங்கள் ஆட்சியை நடத்தி வரும் இராணுவத்திற்கு, சீனாவின் ஆதரவு இருப்பதாக மியான்மர் மக்கள் கருதுவதே சீன தொழிற்சாலைகள் மீதான தாக்குதலுக்கு காரணம் என சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.