உலகை அச்சுறுத்தி வரும் கரோனாவிற்கெதிரான பெரும்பாலான தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களை கொண்டவை. சீனாவில் சில ஒற்றை டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ரஷ்யா ஸ்புட்னிக் லைட் என்ற ஒற்றை டோஸ் அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும் ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசியே அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட ஒற்றை டோஸ் தடுப்பூசியாக இருந்து வருகிறது.
மேலும் இந்தியாவில் தனது ஒற்றை டோஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்த ஜான்சன்&ஜான்சன் நிறுவனம், மத்திய அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தநிலையில் தங்களது ஒற்றை டோஸ் தடுப்பூசி டெல்டா வகை கரோனவை மட்டுப்படுத்துவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
தங்கள் தடுப்பூசி, செலுத்தப்பட்ட 29 நாட்களுக்குள் டெல்டா வகை கரோனவை மட்டுப்படுத்துவதாகவும், காலப்போக்கில் தடுப்பூசியின் பாதுகாப்பு மேம்படும் எனவும் ஜான்சன்&ஜான்சன் நிறுவனம் கூறியுள்ளது. இருவேறு ஆய்வுகளில் இது தெரியவந்ததாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. அண்மையில் எய்ம்ஸ் இயக்குனர், தடுப்பூசிகளின் ஒற்றை டோஸ் மட்டும் டெல்டா வகை கரோனாவிற்கெதிராக பாதுகாப்பளிக்காது என தெரிவித்திருந்த நிலையில், ஜான்சன்&ஜான்சன் நிறுவனத்தின் ஒற்றை டோஸ் தடுப்பூசி, டெல்டா வகை கரோனாவிற்கெதிராக செயல்படுவதும், அது விரைவில் இந்தியாவிற்கு வர இருப்பதும் நல்ல முன்னேற்றமாக கருதப்படுகிறது.