
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக மழை நீருடன், கழிவுநீரும் கலந்து டெங்கு கொசுகள் அதிகளவில் உற்பத்தி ஆகியது. மேலும் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் முறையாக இல்லாததால் தூய்மை பணியில் தொய்வு ஏற்பட்டது. கீழக்கரை பகுதிகளில் அதிகளவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மர்ம காய்ச்சலுக்கு ஆசியா, பாத்திமா என்ற இரண்டு குழந்தைகள் பலியாகினர்.

அதனைத் தொடர்ந்து கீழக்கரையில் அகமது தெரு பொதுநலச்சங்கம் மற்றும் கீழக்கரை சுகாதார துறையினர் இணைந்து டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார். மேலும் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் எம்எல்ஏவிடம் கீழக்கரையில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் கூட பள்ளி நிர்வாகம் விடுமுறை விட மறுக்கிறது.
இந்த கரோனா சூழ்நிலையில் பெரும்பாலான பள்ளிகள் மதிய உணவு இடைவேளை வரை மட்டுமே பள்ளிகள் நடத்துகின்றனர். ஆனால் இந்த தனியார் பள்ளி மட்டும் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு காலையிலிருந்து மாலை 4.30 வரை வகுப்புகள் நடத்துகின்றனர். தொடர்ந்து கரோனா பெருந்தொற்று, டெங்கு, மர்ம காய்ச்சல்கள் போன்றவை வேகமாக பரவிவருகிறது. இதை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் மதிய உணவு இடைவேளை வரை வகுப்புகள் வைக்க வேண்டும் என எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தார். எம்.எல்.ஏவும் உடனடியாக பள்ளிகல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.