
நீட் தேர்வை தடை செய்ய வலியுறுத்தி, மாணவி ப்ரதீபா இல்லத்திற்கு முன் திமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டார். கூலித் தொழிலாளியின் மகளான பிரதீபா 12 ஆம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 சதவீத மதிப்பெண்கள் எடுத்த பிரதீபாவுக்கு தனியார் மருத்துவக்கல்லூரியில் தான் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. தனியார் கல்லூரியில் சேரும் அளவிற்கு தனது பெற்றோர்களிடம் பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்து படிப்பில் சேரவில்லை.
தொடர்ந்து மனதைரியத்துடன் நீட் தேர்வுக்கான வகுப்புகளுக்கு சென்று இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் வந்த நீட் தேர்வு முடிவில் அவர் 39 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. அந்த விரக்தியில் மனமுடைந்த அவர் நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவி ப்ரதீபாவின் உடல் அவரது சொந்த கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் அஞ்சலி செலுத்தினார்.
இதனிடையே இன்று காலை முதல் செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான் தலைமையில் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் திமுக, விசிக, மதிமுக, இந்திய குடியரசு கட்சி, இடதுசாரிகள் உட்பட 300க்கும் அதிகாமனவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள நிதியுதவி ரூ.7 லட்சம் பத்தாது என்றும் அதனை உயர்த்தி தர வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், பெருவளூர் கிராமம் முழுவதும், கிராமத்துக்குள் வரும் அனைத்து வழிகளிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பிணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ப்ரதீபா உடலுக்கு யார் யார் அஞ்சலி செலுத்த வருகிறார்கள் என்பதையும் போலீசார் கண்கானித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் ப்ரதிபா உடல் நல்லடக்கம் செய்யப்படும் என எதிர்க்கப்படுகிறது.