கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் – கோட்டைக்காடு இடையே, வெள்ளாற்றின் குறுக்கே, அமைக்கப்பட்ட தற்காலிகமாக செம்மண் சாலையை, அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டைக்காடு, ஆலத்தியூர், தெத்தேரி, ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, புதுப்பாளையம், முதுகுளம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி, திருமலை அகரம், அரியராவி, மாளிகைக் கோட்டம், நந்திமங்கலம், வடகரை, கோனுார் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் செந்துறை, ஜெயங்கொண்டம், அரியலுார், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வந்தனர். ஆண்டுதோறும் மழைக்காலங்களில் கடலுார் – அரியலுார் மாவட்டங்களை இணைக்கும் தற்காலிக செம்மண் சாலை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுவதும், பின்னர் மீண்டும் சாலை அமைத்து பயன்படுத்துவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, கடலுார், அரியலுார் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில் அரியலுார் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நேற்று அதிகாலை 3:00 மணியளவில் ஆணைவாரி, உப்பு ஓடைகளின் வழியே பாய்ந்த மழைநீரால், வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சவுந்திரசோழபுரம் – கோட்டைக்காடு இடையே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக செம்மண் சாலை அடித்துச் செல்லப்பட்டது.
இதனால், கடலுார் – அரியலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 40 கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு வெளியூர் செல்ல முடியாமல், முருகன்குடி வெள்ளாறு மேம்பாலம் வழியாக 10 கி.மீ துாரமும், பெ.பொன்னேரி தரைப்பாலம் வழியாக 15 கி.மீ துாரமும் சுற்றி பெண்ணாடம், திட்டக்குடி, செந்துறை, அரியலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இருமாவட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.