கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட வந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கைது
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த பல ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நேற்று வரும் வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். ஆனாலும், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் ஆயிரணக்கணக்கான அரசு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வேண்டும், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் கோரிக்கை ஆர்ப்பாட்டங்களை மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தினர். இதையடுத்து, 25ம் தேதி ஜாக்டோ ஜியோ உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னையில் நடந்தது. அந்த கூட்டத்தில், ஆகஸ்ட் 5ம் தேதி (நேற்று) சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி பேரணியில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் ரயில், பேருந்துகளில் நேற்று முன்தினம் இரவே சென்னை வந்தனர். அவ்வாறு, வந்தவர்களில் பல ஆயிரம் பேர் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர், திருத்தணி, திருவாலங்காடு, கடம்பத்தூர், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு உட்பட அனைத்து ரயில் நிலையங்களிலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை கைது செய்ய நேற்று முன்தினம் இரவே போலீசார் குவிக்கப்பட்டனர். பட்டறைபெரும்புதூர் சுங்கச்சாவடி, வேப்பம்பட்டு, திருமழிசை சோதனை சாவடிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். அவ்வழியாக செல்லும் தனியார் பஸ்கள், வேன்களை நிறுத்தி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.