திருச்சி காவல் சரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களைச் சேர்ந்த காவலர்களின் குறைகளைத் தமிழ்நாடு டிஜிபி நேரில் கேட்டறிந்தார்.
திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, அங்குள்ள காவலர்களின் குறைகளைக் கேட்டறிந்ததோடு அவர்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். இந்தக் குறைதீர் கூட்டத்தில் மத்திய மண்டலத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 காவலர்கள் கலந்துகொண்டனர். அதேபோல் காவல்துறையிலிருந்து பணி ஓய்வுபெற்றவர்களின் கோரிக்கை மனுவும் பெறப்பட்டுவருகிறது. இந்த நிகழ்வில் பேசிய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, வடக்கு மண்டலம் மற்றும் சென்னை மாநகரத்தில் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் இந்த மனுக்கள் பெறப்படுகிறது. தற்போது வாங்கப்பட்டுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இதனை அடுத்து, இன்று மாலை மதுரையிலும், நாளை கோவையிலும் காவலர்கள் குறைகளைக் கேட்டறியும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.