Skip to main content

அயோத்தியை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ.

Published on 25/11/2018 | Edited on 25/11/2018
ay

 

எஸ்.டி.பி.ஐ. கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:  அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான உறுதிமொழியை எடுக்கும் ‘தர்ம சன்சாத்’ என்ற நிகழ்வின் மூலம், லட்சக்கணக்கான இந்துத்துவ கும்பலை ஒன்றிணைக்கும் சிவசேனா மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினரின் செயல்பாடுகளால், அங்கு உருவாகியிருக்கும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு, எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது ஆழ்ந்த வேதனையையும் கவலையையும் வெளிப்படுத்துகிறது.

 

களத்திலிருந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைமைக்கு கிட்டியிருக்கும் செய்திகளின் படி, அங்கு நிலவும் பயமும், பீதியும் கலந்த அசாதாரண சூழ்நிலைகளால், பெரும் மக்கள் கூட்டம், குறிப்பாக முஸ்லிம்கள் அயோத்தி மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

 

சிவசேனா, விசுவ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். மற்றும் இதர இந்துத்துவ அமைப்புகள் மூலம், மும்பையிலிருந்தும் அயோத்தியின் அருகிலுள்ள நகரங்களிலிருந்தும் திரட்டும் மிகப்பெரிய அளவிலான இந்த கும்பல் மூலம், நீதிமன்றம் அறிவித்திருக்கும் தற்போதைய நிலைக்கு ஆபத்து ஏற்படுத்தி, வெளிப்படையாகவே சட்டத்திற்கு புறம்பாக தற்காலிக ராமர் கோவில் கட்டுவதற்கான அடிப்படை பணிகள் துவக்கப்படும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி ஐயம் கொள்கிறது. 

 

இத்தகைய அசாதாரண சூழலில் அயோத்தியில் இவ்வளவு பெரிய கும்பலை திரட்டுவதற்கு அனுமதியளித்த மாநில நிர்வாகத்தை எஸ்.டி.பி.ஐ, கட்சி கேள்வி எழுப்புகிறது.

 

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி, “அச்சத்தின் பிடியில் சிக்குண்டுத் தவிக்கும் அயோத்தியா மற்றும் சுற்றுப்புற மக்களின் பாதுகாப்பையும், பள்ளிவாசல்கள் மற்றும் உடமைகளின் பாதுகாப்பையும், இந்திய அரசியல் சட்டத்தின் இறையாண்மையின் பாதுகாப்பையும் துரிதகதியில் விரைந்து உ.பி. பாஜக அரசு உறுதிசெய்ய வேண்டும்.” என கோரியுள்ளார்.

மேலும், பாபரி மஸ்ஜித் வீற்றிருந்த நிலத்திற்கு நீதிமன்றம் அறிவித்துள்ள தற்பொழுதைய நிலை தொடரும் என்ற அறிவிப்பை நிலைநாட்ட, அப்பகுதியை ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

அயோத்தியில் நிகழும் இத்தகைய அசாதாரண நிலையிலும் காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகள் கண்டும்காணாமல் மௌனம் சாதிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களின் தேர்தலில், மத உணர்வுகளைத் தூண்டி வெற்றிபெற வியூகம் வகுத்தே, ராமர் கோவிலின் பெயரால் இத்தகைய கொல்லைப் புறமான கும்பலை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக, பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தானாக முன்வந்து, அயோத்தியில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கட்டளைகள் பிறப்பிக்கும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

பாபரி மஸ்ஜித் வழக்கு சம்மந்தமான உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும்வரை, அங்கு கோவில் கட்டுவதற்கு நடைபெறும் அனைத்து முயற்சிகளும் நீதிமன்ற அவமதிப்பிற்குள் வரும் என்பதை உணர்ந்து செயல்படுவது மத்திய அரசின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்