மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மூன்று நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் இருவர் உயிரிழந்து, உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நேற்று திடீரென ஏற்பட்ட மின் தடையால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 நோயாளிகள் வென்டிலேட்டர் வசதி இல்லாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாக இன்று காலை செய்திகள் வெளியானது.
மின்சப்ளை இல்லாததால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மருத்துவமனை அதிகாரிகள் அலட்சிய போக்கே காரணம் என நோயாளிகள், உறவினர்கள் என குற்றம்சாட்டி வருகின்றனர்.
மதுரையில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் விபத்துக்கான அவசர சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு வென்டிலேட்டர் வசதியுடன் 15 படுக்கை வசதிகள் உள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு மதுரையில் திடீரென சுற்றுப்புற பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியது. திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்த சூறைக்காற்றால் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்ததால் நேற்று மாலையே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மருத்துவமனைக்கு வரக்கூடிய மின்சார இணைப்பில் மின்தடை ஏற்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர் செயல்படவில்லை. இதனால் சிகிச்சையில் இருந்த 15 நோயாளிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மதுரை மாவட்டம் மேலூர் பூந்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சேர்ந்த பழனியம்மாள், விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் ஆகிய மூன்று பேர் அடுத்தடுத்த ஐந்து நிமிடங்களில் மூச்சுத்திணறலால் பலியாகிய நிலையில் தற்போது மேலும் இருவர் உயிரிழந்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தொடர் உயிரிழப்பு சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.