நாம் வாழ்ந்த வாழ்க்கை மற்றவர்களுக்கு பாடமாக வேண்டும் என்ற வார்த்தைகளுக்கிணங்க இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் பள்ளி மாணவர்களுக்கு பாடமாகிவிட்டார்.
திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள ஆதிரெங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அதன் பிறகு வறுமை அவரை படிக்கவிடவில்லை. வயல் வேலையில் ஆர்வம் காட்டினார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மீது பற்றுக் கொண்டார். அதன் விளைவு இயற்கை விவசாயம் அவரை ஈர்த்தது. அதைப் பார்த்த நம்மாழ்வார் அழிந்துவரும் நம் பாரம்பரிய நெல் விதைகளை மீட்க வேண்டும் என்று சொல்ல. அதன் பிறகு அந்த பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
பன்னாட்டு நிறுவனங்களால் அழிந்துவிட்ட நமது 174 நெல் ரகங்களை மீட்டெடுத்து அதை நெல் திருவிழா என்று நடத்தி விவசாயிகளுக்கு கொடுத்து விதைகளை உற்பத்தியை அதிகரித்தார். அதன் விளைவு தமிழகத்தில் இன்று இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பல விருதுகளை வாங்கினார்.
நம் பாராம்பரிய நெல் ரகங்களில் ரசாயன கலப்பு இல்லை என்பதால் நோய்களும் வராது என்றார். ஆனால் நோயை தடுக்க மனிதன் நலமுடன் வாழ இத்தனை ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனுக்கு புற்றுநோய் வந்து கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அவரை சென்னை அப்போலோவில் சேர்த்து செலவுகளை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றக் கொண்டார்.
ஒவ்வொரு நாளும் நெல் ஜெயராமன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவரை காப்பாற்ற பலரும் துடித்தனர். அரசியல் கட்சியினர் நேரில் சென்று பார்த்தார்கள். தமிழக அரசு சார்பில் அவருக்க சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நக்கீரன் இணையத்தில் வெளியான செய்தி தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் போன்றவர்களை அனுப்பி வைத்தது. பிறகு முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களும் போய் பார்த்து நலம் விசாரித்தார்கள். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. டிசம்பர் 6 மறைந்தார்.
இந்த நிலையில் தான் தற்போது 12-ம் வகுப்பு தாவரவியல் பாட புத்தகத்தில் நெல் ஜெயராமன் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. இதைப் பார்த்து பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டவர்கள் நன்றி கூறியுள்ளனர்.
நாம் வாழ்ந்த வாழ்க்கை பாடமாக வேண்டும் என்பது இது தான் என்று சொல்லும் நெல் ஜெயராமனின் வழி செல்வோர்.. அவரால் மீட்கப்பட்ட நெல் ரகங்களை காப்பாற்றுவதுடன் அவர் நடத்தியது போல ஜூன் 8, 9 தேதிகளில் பாரம்பரிய நெல் திருவிழாவும் நடத்தப்படும் என்றனர். இதற்கான ஏற்பாடுகளை அவரது சகோதரர் மகன் ராஜீவ் மற்றும் நெல் திருவிழா விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.