![SEEMAN SEKARBABU](http://image.nakkheeran.in/cdn/farfuture/6bPs1ZVdB2WzW54tQNe81KsyE2hSSRzD_krY10yWAm4/1732028326/sites/default/files/inline-images/A1553.jpg)
சென்னையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் 'திருடுபவர்களுக்கு உதவி செய்வது தான் திராவிடம் .இதேநிலை தொடர்ந்தால் ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி சிலை உடைக்கப்பட்டது போல் கலைஞர் சிலையும் உடைக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்திருக்கிறார். உங்களுடைய கருத்து என்ன?' என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்தவர் அவர், ''சீமான் கையில் உடைக்கிறேன் என்று சொன்னாரா? எதில் உடைக்கிறேன் என்றார். அது தெரிந்தால் தான் அதற்கு தகுந்த மாதிரி பதில் சொல்ல முடியும். தமிழகத்தில் கலைஞரால் 'உடன் பிறப்பு' என்ற வார்த்தையில் தூக்கி நிறுத்திய கரங்கள் ஒரு கோடிக்கு மேல் இருக்கிறது. ஒரு சில லட்சங்களை கொண்ட உங்களுடைய கரங்களே இதுபோன்று சிலைகளை உடைக்க முற்படுமானால் உடைக்கின்ற கரங்களை ஒரு கோடிக்கு மேலாக உள்ள உடன்பிறப்பு கரங்கள் எப்படி பதம் பார்க்கும் என்பதை உங்களுடைய கேள்விக்கே விட்டு விடுகிறேன்.
திமுகவை பொறுத்தவரை 'வேல் எடுத்த மண்ணிலே; வீரம் செறிந்த மரபிலே; பால் குடிக்க வந்தவனே உன் நடையை காட்டு. பகைவரை வென்று விடும் படையை காட்டு' என்பதைப் போல் எப்படிப்பட்ட பகைவன் வந்தாலும் தோற்கடிப்பதற்கு இருக்கும் படை தான் திராவிடம் மாடல் படை. நாங்கள் சமத்துவம் சமாதானம் பேசுவதால் கோழைகள் என்று நினைக்க வேண்டாம். எங்களுக்கும் வீரம் இருக்கிறது. சீமான் வாய் சொல்லில் வீரர் என்பது தெரியும். சீண்டல் என்பது வார்த்தையில் இருக்க கூடாது பல பிரயோகம் இருக்க வேண்டும். தேர்தல் களங்களில் அவருடைய செல்வாக்கை நிரூபிக்க வேண்டும். இவைகளை தவிர்த்து வாய்க்கு வந்ததை பேசி விட்டுப் போவதில் எந்தவிதமான பலனும் இல்லை''என்றார்.