மேகதாது அணை விவகாரம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு குறித்து பார்ப்போம்.
கர்நாடகா மாநிலத்தில் காவிரி குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட அம்மாநில அரசு முயலுகிறது. அணை கட்டப்பட்டால் பல்லாயிரம் ஹெக்டேர் வனப் பகுதிகள் நீருக்குள் மூழ்க நேரிடும் என்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் அடிப்படையில் பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
மேகதாதுவில் அணைக்கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் கொண்டக் குழுவை கடந்த ஏப்ரல் மாதம் 15- ஆம் தேதி அமைத்தது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கர்நாடகா மாநில அரசு மேல்முறையீடு செய்திருந்தது. கர்நாடக அரசின் கருத்துகளைக் கேட்காமல் குழுவை அமைத்தது ஒரு சார்பான முடிவு என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகதாது அணை குறித்து தமிழ்நாடு தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரிப்பது உச்சநீதிமன்றத்தை மீறி செயல்படுவது போல் ஆகும். என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
எனவே, மேகதாது அணை விவகாரம் குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் உள்ள வழக்குகளை முடித்து வைத்த நீதிபதிகள், மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவையும் கலைத்து உத்தரவிட்டனர்.