தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வர். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை ஆகும். இந்த கோவில் 1,600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. அதேபோல் மீனாட்சி அம்மன் கோவிலில் முக்கிய விழாவாக ஆண்டுதோறும் மதுரை வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். இந்தியா மட்டுமல்லாமல் உலக முழுவதிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதும் கூட்டம் நிறைந்தே இருக்கும். இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வரும் அனைவருக்கும், தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் தீபாவளி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்துள்ளார்.