தினகரனுக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெருகுவதை தடுக்க முயற்சி - நாஞ்சில் சம்பத்
எதிர்தாக்குதல் நடத்த உத்தேசம் இல்லை என்றும், டி.டி.வி.தினகரனுக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெருகுவதை தடுக்க அராஜகத்தில் சிலர் ஈடுபடுகின்றனர் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
எந்த இடத்திலும் திருப்பி தாக்குவது, பதிலுக்கு பதில், பழிக்கு பழி என்பது டி.டி.வி.தினகரனின் அகராதியில் இல்லை. அவரை நம்பி களமாடுகிற நாங்கள் யாரும் எதிர் தாக்குதல் நடத்த உத்தேசமும் இல்லை. 20 சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து இருக்கும் நிலையில், மேலும் எந்த சட்டமன்ற உறுப்பினரும் ஆதரிக்க கூடாது என்பதற்காக சிலர் அராஜகத்தில் ஈடுபடுகின்ற இந்த அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.
அதிகார துஷ்பிரயோகம், அத்துமீறல் ஆகியவை பிள்ளை விளையாட்டு போல் நடந்து கொண்டு இருக்கிறது. நாடெங்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் எங்களுக்கு வருகின்றன. வாயினால் சொல்ல முடியாத வார்த்தைகளால் ஆபாச அர்ச்சனைகள் செய்து தமிழ்நாட்டு அரசியலை ஆபாச குப்பையாக மாற்றுவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முயற்சிக்கிறது.அவதூறு, அவமதிப்பு, களங்கம், பழி எல்லாவற்றையும் கடந்து தான் ஒரு தலைவன் தலைநிமிருவான் என்று சொன்னால், அந்த வரலாற்றை எழுத இருப்பவர் டி.டி.வி.தினகரன் தான்.
இதற்கு அச்சப்படுகின்ற நிலையில் நாங்கள் இல்லை. அ.தி.மு.க.வை பா.ஜ.க. இயக்குகிறது என்று சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ் சொன்னதை, நான் ஆதரிக்கிறேன்.எல்லா பாவங்களையும் செய்ய சிலர் துணிந்துவிட்டார்கள். ஆற்றங்கரையில் நிற்கும் மரத்துக்கு ஆயுள் குறைவு. அந்த நிலைமை தான் இவர்களுக்கும் வரும். டி.டி.வி.தினகரனையோ, அவர்களை நம்பி இருக்கும் தொண்டர்களையோ அச்சுறுத்தவோ, அடக்கு முறை காட்டவோ, சொத்தை சூறையாடுவோம் என்று காட்டியோ பயமுறுத்த முடியாது. டி.டி.வி.தினகரன் தான் கட்சிக்கு தலைமை தாங்குவார். இவ்வாறு கூறினார்.