Skip to main content

கடத்தல் வழக்கில் கோடம்பாக்கம் ஶ்ரீ கைது!

Published on 13/07/2021 | Edited on 14/07/2021
g

தொழிலதிபரை கடத்தி சொத்தை அபகரித்த வழக்கில் இந்து மகா சபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீயை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளனர்.

 

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடந்த 2019 ஆம் ஆண்டு கடத்தி சொத்துக்களை அபகரித்ததாக காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும், கோடம்பாக்கம் ஸ்ரீ, தொழிலதிபர் வெங்கடேஷ் சீனிவாசராவ் உட்பட 10 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் காவல்துறை அதிகாரிக்கு சம்பந்தம் இருப்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சிபிசிஐடி போலீஸ் சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் சிவகுமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட 10 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். கோடம்பாக்கம் ஸ்ரீ மட்டும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில், தொழிலதிபர் சீனிவாசராவ் தான் கொடுத்த கடனுக்காக தொழிலதிபர் ராஜேஷுக்கு ரவுடிகள் மூலமாகவும், காவல்துறை அதிகாரிகள் மூலமாகவும் பிரச்சனை கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

 

குறிப்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக தமிழக டிஜிபிக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த தமிழக டிஜிபி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறியதன் அடிப்படையில், திருமங்கலம் காவல் நிலைய உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், அப்போது காவலர்களாக இருந்த கிரி, பாலா, ஷங்கர் மற்றும் அனைத்து இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, சீனிவாசராவ், அவரது மகன் தருண் கிருஷ்ண பிரசாத், சிவா உள்ளிட்ட 10 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பொய்யான ஆவணத்தை தயாரித்தல், ஏமாற்றுவதற்காக போலி ஆவணத்தை தயாரித்தல், பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மை என பயன்படுத்துதல், மோசடி, கூட்டு சதி என 5 பிரிவின் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பத்து பேரையும் கைது செய்யும் பணியில் சிபிசிஐடி போலீஸார் மும்முரமாக செயல்பட்டனர். 

 

இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த அனைத்திந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ யை சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீ யிடம் விசாரணை நடத்தி, பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர். கோடம்பாக்கம் ஸ்ரீக்கு வருகிற 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் மீதமுள்ள காவல்துறை அதிகாரிகள் உள்பட 9 பேரை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருவதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்ற நீதிபதி குடியிருப்பு வளாகத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மீது கோடம்பாக்கம் ஸ்ரீயின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், கேமராவை உடைத்ததால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்