காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், சாலவாக்கத்தை அடுத்த பாலேஸ்வரத்தில் கடந்த 8 ஆண்டுகளாக இயங்கி வருகிறது புனித தாமஸ் கருணை இல்லம். எந்த ஆதரவும் இல்லாமல் இறக்கும் தருவாயில் உள்ளவர்கள் இந்த கருணை இல்லத்தில் அனுமதிக்கப்படுவர். இந்த கருணை இல்லத்தில் முதியோர்களின் உறுப்புகள் திருடப்படுவதாகவும், மேலும் இறந்தவர்களின் எலும்பு கூண்டில் இருந்து மருந்து தயாரிக்க அதை வெளிநாடுகளுக்கு கடத்துவதாக புகார்கள் எழுந்தன.
இந்த புகாரை விசாரித்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலத்துறை அங்கு சுகாதார குறைபாடுகள் உள்ளதாகவும், சரியான ஆவணங்கள் இல்லை எனவும், மேலும் அந்த கருணை இல்லம் உரிமை புதுப்பிக்கப்படவில்லை எனவும் கூறி கருணை இல்லத்திற்கு சீல் வைத்தது. மேலும், அங்கிருந்த 216 முதியவர்களையும் மீட்டு வெவ்வேறு கருணை இல்லத்திற்கு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கருணை இல்லம் சார்பில் சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கருணை இல்லத்தில் வெளியேற்றப்பட்ட 216 முதியவர்களை மீண்டும் கருணை இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்றும், அந்த கருணை இல்லம் மீண்டும் செயல்படவும் உத்தரவிட்டது.
வேறு கருணை இல்லத்திற்கு மாற்றப்பட்ட 12 முதியவர்கள் மரணம் அடைந்துள்ளதாகவும், மேலும் பலர் பராமரிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் நீதிமன்ற உத்தரவின்படி அவர்களை மீண்டும் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் கொண்டுவந்து சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.