ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரை சந்தித்தது, அதிமுகவில் தான் பணியாற்றியது குறித்து நினைவுகளை பகிர்ந்துகொண்டார் இலக்கியவாதியான நாஞ்சில் சம்பத்.
''சென்னை பெருவெள்ளம் வந்தபோது நான் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்ததால், நான் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதாக செய்தி வந்தது. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. எனக்கு ஏன் இந்த தண்டனை? 'நன்றே செய்வாய்! பிழை செய்வாய்? நானோ இதற்கு நாயகமே!' என்ற மாணிக்கவாசகருடைய பாட்டை கோட் பண்ணி ஒரு கடிதம் எழுதி ஜெயலலிதா கையில் கொடுத்தேன்.
அதற்கு என்னை வரச்சொல்லி, 'ஒன்னுமில்ல சம்பத், இதை பெரிசா நினைக்க வேணாம். ஆக்சன் எடுத்ததா நினைக்காதீங்க. ஆக்சன் எடுத்தா கட்சியை விட்டு நீக்குவது, யாரும் தொடர்பு கொள்ளக்கூடாதுன்னு சொல்வது. ஊடகங்களும், பத்திரிகைகளும் உங்களுக்கு எதிராக ஒரு நிலையை எடுத்தாங்க. அதை பேலன்ஸ் பண்றத்துக்காக நான் அப்படி எடுத்தேன். நீங்க ஒன்னும் நினைக்க வேணாம்' என்று சொல்லிவிட்டு எனக்கு செய்தித் தொடர்பாளர் பதவி தந்தார்.
அதற்கு பிறகுதான் சட்டமன்றத் தேர்தலில் அண்ணன் ஸ்டாலின் எந்த இடத்தில் பிரச்சாரம் செய்கிறாரோ, அந்த இடத்தில் அதற்கு அடுத்த நாள் சம்பத் பேசணும் என்று மீண்டும் ஒரு அங்கீகாரத்தை தந்தார்.
அதற்கு பிறகு செய்தித் தொடர்பாளர் பதவி தந்ததற்கு நன்றி தெரிவிக்க சென்றபோது, மிகவும் கருணையுடன் நடந்து கொண்டார். வேற எதாவது சொல்லனுமா சம்பத் என்று கேட்டார். ஒன்றுமில்லம்மா என்று சொன்னேன்.
நான் அவரிடத்தில் எந்த கோரிக்கையும் கேட்கவில்லை. எந்த பதவியும் கேட்கவில்லை. எந்த அதிகாரப் பதவியும் வேண்டாம் என்று முதல் சந்திப்பிலேயே சொல்லிவிட்டேன். அரசியல் தளத்திலும், இலக்கிய தளத்திலும் முதல் பேச்சாளர் என்ற முத்திரையை பதிக்கணும் என்பதுதான் என் வாழ்க்கையின் நோக்கம் என்றேன்.
'அதான் பதிச்சிட்டீங்களே' என்றார். 'இதுவரைக்கும் தேர்தலில் நிக்கவே இல்லீயா... நீங்க நிக்கணுமுன்னு விரும்பவும் இல்லீயா'ன்னு கேட்டாங்க. இல்லை என்று சொன்னேன். 'அபூர்வமான கேரக்டரா இருக்கே சம்பத் கேரக்டர்' என்று சொன்னாங்க. இதையெல்லாம் மறக்க முடியல...''