திருமங்கலம் - கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட, 5 பேருக்கு சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கைக் குழந்தை உள்பட 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.
திருமங்கலம் சவுகத் அலி தெருவைச் சேர்ந்தவர், பழ வியாபாரி அபுபக்கர் சித்திக். இவருடைய மூத்த மகள் நஸ்ரின் பாத்திமாவிற்கு ஆண் குழந்தை பிறந்து 7 மாதம் கடந்த நிலையில், கணவர் வீட்டில் விடுவதற்காக, குடும்பத்துடன் திருமங்கலத்திலிருந்து சிவகாசிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, விருதுநகரிலிருந்து பெங்களூர் நோக்கி சென்றுகொண்டிருந்த காரின் முன்பக்க டயர் வெடித்து நிலைதடுமாறி, கள்ளிக்குடி நான்குவழிச் சாலையின் தடுப்புச் சுவரைத் தாண்டி, மற்றொரு சாலையில் எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த ஆம்னி கார் மீது மோதியதில், ஆம்னி காரில் பயணம் செய்த அபுபக்கர் சித்திக் (55) மனைவி சகர்பானு(50) மகள் நஷ்ரின்பாத்திமா(22) மகன் சாகுல்ஹமீது(20) இளையமகள் ஷிஃபா(I8) உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த காரை ஓட்டி வந்த பெங்களூரு விராட் நகரைசேர்ந்த கௌதம் (27) மற்றும் இலான் (7 மாத கைக்குழந்தை) ஆகிய இருவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்த சம்பவம், பெரும் சோகமாகப் பார்க்கப்படுகிறது.