மயிலாடுதுறை அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரைக் கண்டித்து ஆசிரியர்கள் ஒருபுறம் உள்ளிருப்பு போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். மறுபுறம் தலைமையாசிரியர் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 36 மடிக்கணினிகளுடன் பள்ளி வளாகத்திலிருந்து தப்ப முயன்றபோது அங்கிருந்தவர்கள் சுற்றிவளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர். 34 நான்கு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். கடந்த 7ஆம் தேதி தலைமை ஆசிரியர் சித்ரா, மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் செந்தில் என்பவரை அவமானப்படுத்தியதால், பள்ளியிலேயே தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவருகிறார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளியின் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் மனு ஒன்றையும் அளித்தனர். ஆனால் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளோ புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம்கடத்திவந்தனர். அதே நேரம் பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ராவோ, ‘எனக்கு இருக்குற செல்வாக்குக்கு அவங்க எம்மாத்திரம்’ என சக ஆசிரியை இரண்டு பேரிடம் கூறிவிட்டு வழக்கம்போல மீண்டும் இன்று (11.12.2021) பள்ளிக்கு வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் 20க்கும் மேற்பட்டோர் வருகை பதிவேட்டில் கையெழுத்து போடாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும்போதே தலைமை ஆசிரியை சித்ரா தனது காரில் பள்ளியைவிட்டு வெளியேற முயற்சித்து காரில் விரைந்தார். தலைமை ஆசிரியர் அவசர அவசரமாக வெளியேறியதைக் கண்டு சந்தேகமடைந்த பெற்றோர்களும், ஆசிரியர் சங்கத்தினரும் காரை வழிமறித்து ஆசிரியையிடம் பேசிக்கொண்டிருக்கையில் காரில், கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மடிக்கணிணி தென்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது காரை முழுமையாக சோதித்ததில் 36 மடிக்கணினிகள் இருந்ததைக் கண்டு பொதுமக்கள் பேரதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, பள்ளி வளாகத்தின் வாயில் கதவைப் பூட்டு போட்டு மூடிவிட்டு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பாலையூர் காவல் ஆய்வாளர் விசித்ராமேரி உள்ளிட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மூன்று மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தலைமை ஆசிரியர் மீது விசாரணை மேற்கொண்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற உத்தரவாதம் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலைந்து சென்றனர்.
தலைமையாசிரியை சித்ராவிடம் இதுகுறித்து கேட்டோம், அவர் பதில்கூற மறுத்துவிட்டார். அவருக்கு நெருக்கமான ஆசிரியை ஒருவர் கூறுகையில், "பிரச்சனை வந்துவிட்டது, லேப்டாப் இங்கிருந்தால் ஏதாவது பிரச்சனை வந்துவிடும், அதோடு அதற்கான பொறுப்பு தலைமை ஆசிரியர் என்பதால் பாதுகாப்புக்காகவே அதை எடுத்துச் சென்றிருக்கிறார்" என்கிறார்.