பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாநகரம் ஊரிசு கல்லூரியில் தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் கலந்துக்கொண்டார்.
விழாவில் கலந்துக்கொண்ட விக்னேஷ்வரன் பேசும்போது, இந்தியாவிற்கு வந்து தங்கியுள்ள எம் இனமக்கள் இங்கு பல சலுகைகளுடன் வாழ்கின்றனர். அவர்களுக்கு இரட்டை குடியுரிமை தருவதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. அந்த சிக்கல்களை கலைந்து தமிழகத்தில் தங்கியுள்ள ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கவேண்டும்.
இங்குள்ள ஈழத்தமிழர்களும் இலங்கைக்கு வந்து நல்ல வாழ்க்கை வாழவேண்டும். அவர்கள் வந்து சிறப்பான வாழ்க்கை வாழும் வரை அவர்கள் இந்தியா வந்து செல்லவேண்டியிருக்கும். அப்படி வரவேண்டும் என்றால் இரட்டை குடியுரிமை இருந்தால் மட்டும்மே சிறப்பாக இருக்கும்.
சொந்த மண்ணில் தமிழர்கள் நல்வாழ்வு வாழ்வதை இந்திய அரசு உறுதிசெய்ய வேண்டும். அதனை கூற காரணம், நான் முதல்வராக இருந்தபோது, சொந்த நாடு திரும்பும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு போன்றவற்றை உருவாக்கி தருவதாக இந்திய வாக்குறுதி அளித்திருந்தது. தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் நன்றாக கல்வியை பெற்றுள்ளார்கள். அந்த கல்வி மூலம் வேலைவாய்ப்பினை பெறவும், சொந்தநாட்டில் வேலை வாய்ப்பு பெறவும் இந்தியா உறுதி செய்ய வேண்டும் என்றார்.
தற்போது இலங்கை மண்ணில் வெற்றி பெற்று பதவிக்கு வந்துள்ளவர்கள், பௌத்த மத, சிங்கள வெறியை பரப்பினார்கள். அதனால் தான் அவர்களுக்கு தமிழர் பகுதிகளில் வாக்குகள் விழவில்லை. சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள். இதனால் தமிழர்கள் அச்சத்துடன்தான் வாழ்கிறார்கள் என்றார்.