தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் கடந்த 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதற்கடுத்த நாளே வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட்டை எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தற்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் நேற்று (18.08.2021) நடைபெற்ற விவாதத்தில் சட்டப்பேரவையையே சிரிப்பில் ஆழ்த்தியிருக்கிறார் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி சட்டப்பேரவையில் பேசும்போது சபாநாயகரை நோக்கி, “நானும் ஒரு ஆசிரியர், நீங்களும் ஒரு ஆசிரியர். எனவே சட்டமன்றத்தில் பேச கூடுதல் நேரம் தர வேண்டும்” என பேசியுள்ளார். அப்போது குறுக்கிட்ட திமுகவின் துரைமுருகன், ''நீங்கள் நானும் ஆசிரியர். எனவே பேச கூடுதல் நேரம் கொடுங்கள் எனக் கேட்கிறார். அதேபோல் பாஜகவின் கோவை எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ‘நாமெல்லாம் ஒன்றாக தொலைக்காட்சி விவாதத்தில் பங்குகொண்டவர்கள். எனவே எனக்குப் பேச கூடுதல் நேரம் கொடுங்கள்’ என கேட்கிறார். நெல்லைக்காரர்கள் வந்தால் அவர்களுடனும் உறவு கொண்டாடுகிறீர்கள். இதனை எப்படி பார்ப்பது” என சபாநாயகர் அப்பாவுவை பார்த்து கேட்டார். இதனால் சட்டப்பேரவையே சிரிப்பலையில் மூழ்கியது. இதற்கு முன்பே பலமுறை சட்டப்பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியவர் துரைமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது.