தி.மு.க பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் அருண்குமார், அதே பகுதியில் மரக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், இவர் தி.மு.க வர்த்தக அணி துணை அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
நேற்று இரவு எட்டரை மணி அளவில் இவர் தனது கடையைப் பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே அவர் சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு கார் அவருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி அருண்குமார் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் 3 பேர், கண்ணிமைக்கும் நேரத்தில் அருண்குமாரின் தலை மற்றும் உடலில் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள்.
இதில் அவருடைய தலை சிதைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து துடிதுடித்து இறந்தார். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தெற்கு போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார், அருண்குமார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முன் விரோத காரணமாக அருண்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அரசியல் தொழில் போட்டி காரணமாக இந்தக் கொலை நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தப்பி ஓடியவர்கள் பிடிபட்டால் அருண்குமார் கொலை செய்யப் பட்டதற்கான காரணம் தெரியவரும் எனக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அருண் குமார் கொலை செய்யப்பட்டது குறித்து, தகவல் அறிந்த அவருடைய குடும்பத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள அவருடைய உடலைப் பார்த்துக் கதறி அழுதனர்.