கோவை சங்கனூர் பகுதியை சேர்ந்தவர்கள் சுனில்குமார் மற்றும் பிந்து. தம்பதியரான அவர்கள் அதே பகுதியில் ஏல சீட்டு நடத்தி வருகின்றனர். ஒரு லட்சம், இரண்டு லட்சம்,நான்கு லட்சம் மற்றும் நான்கரை லட்சம் என பல்வேறு விதமான தொகையிலான ஏல சீட்டுகள் நடத்தி வரும் நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அவர்களிடம் பணம் செலுத்தி சீட்டு கட்டி வந்துள்ளனர்.
இதனிடையே ஏல சீட்டிற்கான காலம் முடிவடைந்தும் உறுப்பினர்களுக்கு பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர் அத்தம்பதியினர். மேலும் பணம் கேட்டு வீட்டிற்கு செல்வோரை தகாத வார்த்தைகளால் பேசுவதும் தாக்க முற்படுவதுமாக இருந்ததையடுத்து பணத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட சிலர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.ஏற்கனவே கடந்த ஆண்டு இதே மோசடி தொடர்பாக மாநகர குற்றப்பிரிவில் உரிய ஆவணங்களுடன் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறும் தற்போது மீண்டும் புகார் அளித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பலர் காவல்துறையில் புகார் அளிக்க தயங்குவதாகவும் கூறினர். மேலும் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.சீட்டு கம்பெனி மோசடி,நிதி நிறுவன மோசடி என தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் மீண்டும் மீண்டும் இதுபோன்ற மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..