திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலக்கோட்டை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வட்டாரத் தலைவர் கோகுல்நாத் தலைமையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி நடைபெற்றது. முன்னதாக மதுரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு மாவட்டத் தலைவர் அப்துல்கனி ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் முடிந்ததும், காங்கிரஸ் கட்சியினர் திடீரென சைக்கிளுடன் பெட்ரோல் பங்க்கில் நுழைந்து போராட்டம் நடத்த முற்பட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்களும், அதன் உரிமையாளரான திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கரிகாலப்பாண்டியனும் போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தி எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கும் பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது. பின்னர் அங்கிருந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். பின்னர் சைக்கிள் பேரணி நிலக்கோட்டை நகர் முழுவதும் ஊர்வலமாக சென்று முடிந்தது.
மத்திய அரசைக் கண்டித்து நடத்தும் போராட்டத்தில் கூட்டணிக் கட்சியினர் நேர் எதிரே நின்று மோதிக்கொண்ட சம்பவம் நிலக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.