Skip to main content

பாரதிதாசன் பல்கலைகழக மோசடி பேராசிரியர்கள் ! வாழ்நாள் முழுவதும் தடை ! 

Published on 16/03/2018 | Edited on 16/03/2018


 

பல்கலைக்கழகங்களில் பிஎச்டி படிக்கும் மாணவருக்கு அந்தந்த துறையில் வழிகாட்டியாக பேராசிரியர் ஒருவர் இருப்பர். ரெகுலரில் 3 ஆண்டிலும், பகுதி நேரத்தில் 4 ஆண்டுகளிலும் ஆய்வை முடிக்க வேண்டும். 6 ஆண்டு ஆய்வு காலத்தை மாணவர்கள் நீட்டிக்க முடியும். மாணவர்கள் சமர்ப்பிக்கும் ஆய்வறிக்கைகள் தகுதியானதா என்பதை 2 அயற்தேர்வாளர்கள் மதிப்பிடுவர். தமிழகத்தை சாராத இந்தியாவுக்குள் 4 பேரும், வெளிநாட்டை சேர்ந்த 5 பேரும் என 9 அயல் தேர்வாளர்களை மாணவர்களின் வழிகாட்டியாக செயல்படும் பேராசிரியர் தேர்வு செய்து தருவார்.
 

2 அயல் தேர்வாளர்களை பல்கலை. துணைவேந்தர் தேர்வு செய்து, மாணவர் சமர்ப்பித்த ஆய்வறிக்கையை மதிப்பிட அனுப்புவார். அயல்தேர்வாளர்கள் மதிப்பிட்ட பிறகே மாணவர்கள் பிஎச்டி பட்டம் பெற முடியும். இதுதான் நடைமுறை. ஆரம்பத்தில் தபால் மூலம் ஆய்வறிக்கை அனுப்பப்பட்டு வந்தது. தற்போது, இ-மெயில் மூலமே அயல்தேர்வாளர்களுக்கு ஆய்வறிக்கை அனுப்பப்படுகிறது. திருச்சி பாரதிதாசன் பல்கலை காஜாமலை வளாகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையை சேர்ந்த பேராசிரியர் ஜெயராஜ் ஆய்வுப்படிப்பு படிக்கும் மாணவர்களின் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார். அவர், மாணவர்களுக்கான அயல் தேர்வாளர்கள் என 9 பேரின் இ-மெயில் முகவரியை தேர்வு செய்து துணைவேந்தருக்கு சமர்பித்துள்ளார்.
 

அந்த இ-மெயில் முகவரி அனைத்தும் அந்த பேராசிரியரே போலியாக தயாரித்து வழங்கி உள்ளார் என தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலர் வரை புகார்கள் சென்றது. அதுகுறித்து விசாரணை நடத்த உயர்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி பல்கலை. துணைவேந்தர் மணிசங்கர் இப்புகார் குறித்து விசாரணை நடத்த குழு ஒன்றை அமைத்துள்ளார். 
 

இதுகுறித்து பல்கலை. ஆசிரியர் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் பாண்டியன் ‘அயல்தேர்வாளர்கள் தேர்வு செய்யும் முறையில் தவறில்லை. ஆனால் அந்தந்த துறை சார்ந்த அயல்தேர்வாளர்களிடம் மாணவர்களின் ஆய்வறிக்கை சமர்ப்பித்தால்தான் மாணவர்களுக்கு அது பயனளிக்கும், சரியான ஆய்வறிக்கை தேர்வு செய்யப்படும். அயல் தேர்வாளர்கள் தேர்வு செய்வதில் முறையான அமைப்பு வேண்டும் என்றார்.
 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாணவர்களின் வழிகாட்டியாக செயல்பட பேராசிரியருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தில் சிண்டிகேட் கூட்டம் நேற்று நடந்தது. துணைவேந்தர் மணிசங்கர் தலைமை வகித்தார். பதிவாளர் கோபிநாத் மற்றும் 10க்கும் மேற்பட்ட சிண்டிகேட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 

கூட்டத்தில், பல்வேறு ஊழல், முறைகேடுகள் குறித்து விவாதம் நடந்தது. குறிப்பாக பல்கலை பதிவாளர் கோபிநாத் தேர்வு செய்யப்பட்டதில் விதிமீறல்கள், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டி இருந்தனர். 
 

மேலும், அவரது தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், பதிவாளர் நேர் காணலின்போது பதிவு செய்த வீடியோவை (எடிட் செய்யாமல்) வழங்க வேண்டும் என கோரிக்கை எழுப்பி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கூட்டத்தில் விவாதம் நடந்தது. சிண்டிகேட் உறுப்பினர் முருகதாஸ் பதிவாளர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 
 

இதுசம்பந்தமாக கவர்னர் மாளிகை விளக்கம் கேட்டால் விளக்கம் அளிக்கப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதேபோல, பல்கலையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை பேராசிரியர் ஜெயராஜ் ஆய்வுப்படிப்பு (பிஎச்டி) மாணவர்களின் வழிகாட்டியாக உள்ளார். இவர், ஆய்வறிக்கையை மதிப்பிடும் புறத்தேர்வாளர்களின் இ-மெயில் முகவரியை தானே தயார் செய்து வழங்கியதாக புகாரில் சிக்கி உள்ளார். இதுகுறித்து துணைவேந்தர் உத்தரவுப்படி விசாரணை குழு விசாரித்து வந்தது. 
 

இந்நிலையில் நேற்று நடந்த விவாதத்தில் பேராசிரியர் ஜெயராஜ் இனிமேல் பிஎச்டி மாணவர்களின் வழிகாட்டியாக செயல்பட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதேவேளையில், பாரதிதாசன் பல்கலையில் முறைகேடாக சமஸ்கிருதம் உயர்படிப் பில் தங்கப்பதக்கம் பெற முயன்ற சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பெண் அலுவலர் ஒருவர் சிக்கினார். 
 

இந்த புகாரை அடுத்து பட்டமளிப்பு விழாவுக்கு முதல் நாள் அவரது பதக்கம், பட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு, அதுவும் விசாரணையில் உள்ளது. தேசிய கல்வியியல் கல்லூரி வாரியம் இரு நபர் குழுவில் இடம் பெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்தன், முறைகேடாக நாடுமுழுவதும் பல்வேறு கல்வியியல் கல்லூரிக்கு தகுதியே இல்லாமல் அனுமதி வழங்கியதாக சிபிஐ விசாரணையின் பிடியில் உள்ளார். 
 

இதுகுறித்து விசாரணை நடந்தாலும் இதுவரை அவர் மீதான நடவடிக்கை என்ன என்பது அறிவிக்கப்படவில்லை. இது சம்பந்தப்பட்ட விவாதம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஆனந்தன் மீது விளக்கம் கேட்டு 17பி நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து நாளை (17ம் தேதி) மீண்டும் செனட் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய எடுக்கப்படும் என்கிறார்கள். 
 

சார்ந்த செய்திகள்