மனிதர்களுக்கு உயிர் மீதான கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது கரோனா வைரஸ் தொற்று. இதன் தாக்கம் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களை முடக்க வைத்துள்ளது. ஈரோடு மாவட்டத்திற்கு சென்ற 11ந் தேதி வந்த தாய்லாந்து இஸ்லாமியர்கள் 7 பேர் ஈரோட்டில் உள்ள இரண்டு மசூதிகளில் தங்கி தொழுகை செய்துள்ளனர்.
இதில் இரண்டு பேர் சொந்த நாடான தாய்லாந்து செல்ல கோவை விமான நிலையத்திற்கு 16ந் தேதி செல்ல அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு காய்சல் இருந்துள்ளது. அவரை கோவை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். பிறகு அந்த நபர் மருத்துவமனையில் இறந்து விட்டார். சிறுநீரகப் பிரச்சனையால் அவர் உயிரிழந்தாக அதிகாரிகள் கூறினர். மீதி ஒருவரை அழைத்துக்கொண்டு ஈரோடு வந்த அதிகாரிகள் அங்கு இருந்த ஐந்து பேரையும் மருத்துவமனை கொண்டுபோய் பரிசோதனை செய்தனர். அதில் இரண்டு பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.
இந்த நிலையில் இந்த தாய்லாந்து நபர்கள் தங்கியிருந்த கொல்லம்பாளையம் புது மஜீத் வீதி உட்பட 10 வீதிகளில் அவர்களோடு தொடர்பில் இருந்த சுமார் 168 பேர்களை தனிமைப்படுத்தப்பட்டு வைத்துள்ளார்கள். தாய்லாந்து நபர்கள் தங்கியிருந்த புது மஜித் வீதி உட்பட அதனையொட்டியுள்ள 10 வீதிகளை இன்று காலை அரசு அதிகாரிகள் தடுப்பு வைத்து அடைத்து விட்டனர். அங்குள்ள மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.