கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்கள், பின்பற்ற வேண்டிய மின் பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பில், “கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கன மழை காரணமாகத் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட மின்சார பாதிப்பினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் போர்க்கால அடிப்படையில், பணிகளைத் துரிதமாக மேற்கொண்டது. இதனால் தற்போது அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக மின் வயர்கள் மற்றும் மின் சாதனங்கள் பழுது ஏற்பட்டிருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளபடியால் பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன்படி வீட்டில் மின் சுவிட்சுகளை 'ஆன்' செய்யும்போது பாதுகாப்புக்காக காலில் செருப்பு அணிந்து கொள்ளவும். நீரில் நனைந்த பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம். வீட்டின் உட்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது.
மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்கக் கூடாது. வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகிலிருந்து தாங்களாகவே வயர் மூலம் மின்சாரம் எடுத்து வரக்கூடாது. மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ உடனடியாக மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 என்ற அலைப்பேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்” எனத் தெரிவித்துள்ளது.