அரக்கோணத்தைச் சேர்ந்த ராகேஷ், கடற்படையில் (நேவி) பணிசெய்து வருகிறார். இவரும் திருத்தணி அதிமுக நகர செயலாளரும், முன்னாள் சேர்மேனுமான சௌந்தர்ராஜனின் மகளும் ஃபேஸ்புக்கில் பழகி காதலாக மாற, ஒரு கட்டத்தில் வீட்டுக்கு காதல் விவகாரம் தெரியவர, எதிர்ப்பை மீறி பெண் கேட்டு வந்த ராகேஷை, சௌந்தர்ராஜன் ஆட்களை வைத்து அடித்து மிரட்டி துரத்திவிட்டு வேறு மாப்பிள்ளை பார்க்க, அதை அறிந்த ராகேஷ், சௌந்தர்ராஜன் வீட்டுக்கு தானே அடித்த திருமண பத்திரிக்கையுடன் வந்து பெண் கேட்டுள்ளார்.
அப்போது நடந்த பிரச்சனையில் ராகேஷ் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக சௌந்தர்ராஜன் தரப்பில் சொல்லப்பட்டது. படுகாயமடைந்த ராகேஷை திருவள்ளூர் பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராகேஷின் பெற்றோரோ "என் மகன் தைரியசாலி, அதுவும் நேவி ஆபிசர். இப்படி கோழையாக நடந்து கொள்ள மாட்டான். இது திட்டமிட்ட கொலை" என்று புகார் கூறினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராகேஷ் உடல்நிலை மோசமாகி பரிதாபமாக பலியானார். தலைமறைவான சௌந்தர்ராஜனை போலீசார் தேடிவருகின்றனர். கைது செய்து விசாரித்தால் மட்டுமே இவர் மரணத்தில் உள்ள மர்மம் விலகும்.