அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகள், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று (13/09/2022) அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோரது வீடு மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு தொடர்புடைய சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 31 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 32.98 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1,228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளி பொருட்கள், 10 நான்கு சக்கர வாகனங்கள். எல்.இ.டி பல்புகள் வாங்கி அரசுக்கு 5000 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள், 2 வங்கி பெட்டக சாவிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேபோல் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 18.37 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1,872 கிராம் தங்கம், 8.28 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ குழும விதிக்கு முரணாக திருவள்ளூரில் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு சான்று தந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 4 வங்கி பெட்டக சாவிகள் கைப்பற்றப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.