இன்று (18.08.2021) பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரமில்லா நேரத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாட்டில் நடந்த கொள்ளை, கொலை தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கை மீண்டும் தற்போதுள்ள அரசு கையிலெடுத்துள்ளது'' என்று பேசினார். இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். கொடநாடு கொள்ளை, கொலை தொடர்பாக முதல்வர் பேசுகையில், ''கொடநாடு கொலை வழக்கில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல நீங்களே அந்தப் பிரச்சனையைக் கிளப்புகிறீர்கள். அந்த மாதிரிதான் அதிமுகவினரின் போக்கு உள்ளது'' என்று கூறினார். இதனையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். வரும்போதே கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
அதனையடுத்து, வெளியே வந்த அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கின் முகப்பில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுவுடன் பாமக, பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். 'பொய் வழக்கு போடாதே' என்ற கோஷங்களை முன்வைத்து அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டுனர்.
அதனையடுத்து, ஓபிஎஸ் - இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு வீட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை தொடர்பான வழக்கில் ஏற்கனவே விசாரணைகள் முடிந்து, வழக்கு முடியும் தருவாயில் இருக்கும் நிலையில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த வழக்கில் தொடர்புடைய சாயனுக்கு சம்மன் அனுப்பி, அவரை வரவழைத்து, அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த ரகசிய வாக்குமூலத்தில் என்னையும் கழகப் பொறுப்பாளர்கள் சிலரையும் சேர்த்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிமுக அரசால் புலன் விசாரணை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் காழ்ப்புணர்ச்சியோடு திமுக கையில் எடுத்துள்ளது'' என்றார்.
இந்நிலையில், சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து விளக்கமளித்தார். அதில், “மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை. அச்சப்பட தேவையில்லை. நீதிமன்ற அனுமதியுடன்தான் இந்த விசாரணை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. நீங்களே கேட்கிறீர்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆச்சு? நிறைவேற்றவில்லை, நிறைவேற்றவில்லை என்று கேட்கிறீர்கள். கொடநாடு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பது திமுக தேர்தல் வாக்குறுதியில் உள்ள ஒன்றுதான். இன்னும் பல இருக்கு'' என்றார்.