உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக - பாஜக ஈடுபட்டது. பாஜக தரப்பிலிருந்து பெரும் லிஸ்ட்டை அண்ணாமலை அதிமுக தலைமையிடம் கொடுத்திருக்கிறார். அதனை வாங்கிப் பார்த்த எடப்பாடி, ஓபிஎஸ்-சிடம், ‘இவ்வளவு எப்படி கொடுக்க முடியும்; ஒரே ஒரு மேயர் இடம் தான்; அதுவும் நாம் கொடுப்பது தான், அதுமட்டுமின்றி திமுக போட்டியிடும் இடங்களில் எல்லாம் அதிமுக நேரடியா போட்டியிடனும். அதனால், கொடுப்பதை அவர வாங்கிக்கச் சொல்லுங்க’ என்று தெரிவித்திருக்கிறார். முதல் கட்ட பேச்சுவார்த்தை முடித்து முடிவு எட்டப்படாமல் இருந்த நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இ.பி.எஸ். திடீரென சேலத்திற்கு கிளம்பிச் சென்று அங்கு தேர்தல் பணிகளைக் கவனிக்க துவங்கிவிட்டார்.
சீட் ஷேரிங் தகவலும், இ.பி.எஸ். கிளம்பிய தகவலும் அண்ணாமலைக்கு தெரியவர, அவர் ஒ.பி.எஸ்.-சிடம் பேசியுள்ளார். இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘சரி கேட்டத்தைக் கொடுக்கலாம். ஆனா, அப்படிக் கொடுத்த அவ்வளவு இடத்திலும் நிக்க வைக்க உங்களிடம் வேட்பாளர்கள் இருக்காங்களா’ என்று கேட்டதாக பேசிக்கொள்கின்றனர்.
பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் ‘அதிமுகவினருக்கு ஆண்மை இருக்கிறதா’ என கேட்டிருந்தார். இந்நிலையில் ஜெயக்குமாரின் வேட்பாளர்கள் குறித்தான கேள்வி அவர்களுக்கான பதிலடி என விவரம் அறிந்த அதிமுகவினர் பேசிக்கொண்டனர்.
சீட் ஷேரிங்கில் முடிவு எட்டப்படாத நிலையில், அண்ணாமலை, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் கெடுபிடியை பற்றி டெல்லி பாஜகவிற்கு தெரிவித்துள்ளார். அதனைக் கேட்ட டெல்லியோ, ‘உ.பி.யில் மயிரிழையில் வெற்றி வாய்ப்பு மாறும் சூழல் இருப்பதாக உ.பி.யில் பேச்சு எழுந்து வருகிறது. அகிலேஷ் பக்கம் பெரும்பாலானோர் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அதனால், தற்போதைக்கு அங்குதான் கவனம் செலுத்த முடியும். அதுமட்டுமில்லாம அத்துடன் சேர்த்து ஐந்து மாநில தேர்தல் வேற இருக்கு. அதனால், நீங்களே பாத்து பேசுங்க’ என்று சொன்னது மட்டுமின்றி, ‘அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாத்துக்கலாம்’ என்று தெரிவித்திருக்கிறது.
‘நாடாளுமன்றத் தேர்தலை மட்டும் வைத்து மாநிலத்தில் அரசியல் செய்ய முடியுமா? அடிப்படையான உள்ளாட்சியில் ஆரம்பிச்சு பேஸ்மண்ட ஸ்ட்ராங்க போட்டாத்தான் மாநிலத்தில் அரசியல் செய்ய முடியும்’ என்று தனது கட்சியினரிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.
டெல்லியின் நீங்களே பேசிக்கொள்ளுங்கள் எனும் சிக்னலும், ஜெயக்குமாரின் கமெண்ட்டையும் மனதில் வைத்து கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலி பாஜக தனித்து போட்டியிடுகிறது” என்று அறிவித்தார் என்கின்றனர் அரசியல் அறிந்தோர்.