மஹாராஷ்டிராவில் உள்ள சில நகரங்களில் சமீபத்தில் வன்முறைகள் நடைபெற்றன. இது தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ‘மஹாராஷ்டிராவில் திடீரென அவுரங்கசீப்பின் வாரிசுகள் பிறந்துள்ளனர்’ எனத் தெரிவித்து இருந்தார். அதற்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, "பாஜகவினர் காந்தியை கொலை செய்த கோட்சேயின் வாரிசுகள்" என்று பதிலடி கொடுத்து இருந்தார்.
இந்நிலையில் சத்தீஷ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதிக்கு நேற்று மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பயணம் மேற்கொண்டு இருந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது செய்தியாளர்கள், அசாதுதீன் ஓவைசி கருத்து குறித்து கிரிராஜ் சிங்கிடம் கேட்டதற்கு, "தங்களை பாபர் மற்றும் அவுரங்கசீப் போன்ற முகலாய மன்னர்களின் குழந்தைகள் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைபவர்கள் தாயின் உண்மையான மகனாக இருக்க முடியாது. கோட்சே மகாத்மா காந்தியை கொன்றவர் என்றால் அவரும் இந்தியாவின் மதிப்புமிக்க மகன் தான். கோட்சே இந்தியாவில் பிறந்தவர். முகலாய மன்னர்களான பாபர், அவுரங்கசீப் போன்ற ஆக்கிரமிப்பாளர் அல்ல" எனத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே இந்துத்துவ சனாதன சக்திகள் மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சாவர்க்கர் போன்றோரை புகழ்ந்து பேசுவது கடும் கண்டனத்துக்கு உரியது. தேசப்பிதா மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேயைப் புகழ்ந்து பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடியாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.