மதுவிலக்கு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடத்தும் மாநாட்டில் அதிமுகவினரும் பங்கேற்கலாம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்திருந்தார். அதே சமயம் அவர் அதிமுகவிற்கு அழைப்பு விடுத்திருந்தது, திருமாவளவன் திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவோடு கூட்டணி வைக்கப்போகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பேசுபொருளானது. இந்த விவகாரம் அடங்குவதற்குள், ‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும்’ என்று எக்ஸ் சமூக வலைத்தளத்தில் திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியது.
இத்தகைய சூழலில் தான் விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார். அதில் திமுகவுடனான கூட்டணி குறித்து கருத்துகளைத் தெரிவிக்கையில், “விசிக கூட்டணி இல்லாமல் வட மாவட்டங்களில் திமுக வெல்ல முடியாது. குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். தமிழக அமைச்சரவையில் விசிக, இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகளுக்கும் இடம் அளிக்க வேண்டும்” எனப் பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார். இந்த கருத்துகள் திமுக - விசிக இடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில், “திமுக - விசிக ஆகிய கூட்டணிக் கட்சிகள் இடையே எந்த சலசலப்பும் இல்லை. விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாகுவதற்கு வாய்ப்பும் இல்லை. என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியான, ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற வீடியோவில் இருந்த கருத்தை விவாதத்திற்குப் பலரும் எடுத்துக் கொண்டனர். அந்த விவாதம் மேலும், மேலும் விவாதங்களுக்கு இடம் அளித்து விட்டது. அதனால் திமுக - விசிக இடையே எந்த சிக்கலும் எழாது. அவ்வாறு சிக்கல் எழுவதற்கு வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆ. ராசா எம்பி. வலியுறுத்தியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இது தொடர்பாகக் கட்சியில் முன்னணி தோழர்களோடு உட்கட்சி விவகாரங்களைக் கலந்து பேசி எந்த ஒரு முடிவும் எடுக்கப்படும். உட்கட்சி வாகனங்களை முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர் துணை பொதுச் செயலாளர், உயர்நிலைக் குழுவில் இடம் பெற்றுள்ளார் தோழர்களுடன் தொலைப்பேசி வாயிலோடு பேசி இருக்கிறேன். எனவே இது தொடர்பாகக் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.