விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில், மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான தொல்.திருமாவளவன் அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக நேற்று (11-09-24) சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன்,''எந்த போதை பொருளையும் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் விசிகவின் நிலைப்பாடு. கள்ளில் மருத்துவ குணங்கள் இருக்கிறது என எங்களையும் சந்தித்து கள் வியாபாரிகள் தெரிவித்தனர். எந்த அடிப்படையிலும் எந்தப் போதைப் பொருளையும் நாம் கொள்கை அடிப்படையில் ஏற்க முடியாது. தி.மு.க தேர்தல் அறிக்கையில் மதுக்கடைகளை மூடுவோம் என சொல்லி இருக்கிறார்கள். அதை நினைவூட்டி நாங்கள் வேண்டுகோள் வைக்கிறோம். இந்த மாநாட்டிற்கு வரவேண்டும் என விரும்புபவர்கள் வரட்டும்.
அ.தி.மு.க கூட வந்து பங்கேற்கலாம். எந்த கட்சியில் இருந்தும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. இது தேர்தலுக்கானது அல்ல. இதை தேர்தலோடு சம்பந்தப்படுத்த வேண்டாம். எங்களைப் பொறுத்தவரை தேர்தல் கூட்டணி; தேர்தல் அரசியல் என்பது முற்றிலும் வேறு. ஆனால் மக்களுடைய பிரச்சனைக்காக நாங்கள் மதவாத, சாதியவாத சக்திகளை தவிர மற்ற ஜனநாயக சக்திகளுடன் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “டாஸ்மாக் கடைகளை நடத்துவதில் முதல்வருக்கு எள் அளவும் விருப்பமில்ல. என்றைக்காவது ஒருநாள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பது தான் முதல்வரின் எண்ணம். டாஸ்மாக் கடைகளை உடனே மூடினால் என்ன நிலைமை ஏற்படும் என அனைவருக்கும் தெரியும். மதுக்கடைகளை மூடும் கடுமையான சூழலை நிதானமாக அணுக வேண்டும் என்பதே அரசின் நோக்கம். கொஞ்சம் கொஞ்சமாக மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.