ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். பொதுக்குழு வழக்கு காரணமாக அதிமுகவில் வேட்பாளரை இறுதி செய்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு வழியாக அதிமுகவின் வேட்பாளர் இறுதி செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக அமமுக அறிவித்தது. பொதுத்தேர்தலில் அமமுகவிற்கு குக்கர் சின்னம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்கவில்லை. இதனால் குழப்பம் ஏற்படும் என்பதன் காரணமாக தேர்தலில் இருந்து தாங்கள் விலகிக்கொள்வதாக டி.டி.வி.தினகரன் சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பின்வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்துடன் தேர்தலை எதிர்கொள்வோம்' எனவும் டி.டி.வி.தினகரன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அமமுக 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தனியாகத்தான் போட்டியிட்டோம். கூட்டணிக்கான வாய்ப்பு என்பது பாராளுமன்ற தேர்தல் வரும் பொழுது பார்க்கலாம். ஒரே கட்சியில் இணைய வேண்டும் என்பதை நான் என்றும் சொன்னதில்லை. கூட்டணியில் இணைய வேண்டும் என்று தான் சொன்னேன்.
திமுகவை வீழ்த்த வேண்டும் என நினைப்பவர்கள் ஓரணியில் திரண்டு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தான் சொன்னேன். இன்னும் என் நிலைப்பாடு அதுதான். இரட்டை இலை இபிஎஸ் தரப்பிற்கு கொடுத்துவிட்டதால் மட்டும் ஜெயித்துவிடுவார்களா என்ன. மக்களுக்கே தெரியுமே. இரட்டை இலை தவறானவர்கள் கைகளில் தீயவர்கள் கை களில்உள்ளது. சின்னத்தை வைத்துக் கொண்டு தொண்டர்களை ஏமாற்றிக் கொண்டு உள்ளார்கள். மீண்டும் நீதிமன்றம் பழனிசாமி கம்பெனிக்கு இரட்டை இலையை கொடுத்தாலும் இரட்டை இலைக்கான சக்தி இருக்காது. அது தவறானவர்கள் கைகளில் உள்ளது.
அமமுக ஒன்றும் பெரிய கட்சி கிடையாது. இந்த தடவையும் திமுகவை வீழ்த்த வேண்டும் என போட்டியிடுவதற்கு தயாரானோம். ஜெயிப்போம் என்பதை விட வாக்குச் சதவீதத்தை பெறுவோம் என்ற நம்பிக்கையில் தான் இறங்கினோம். தேர்தல் ஆணையம் சின்னம் கொடுக்க மறுத்ததால் தேர்தலில் போட்டியிடவில்லை. நாங்கள் திமுகவையும் ஆதரிக்க முடியாது. அதிமுகவையும் ஆதரிக்க முடியாது. இதுதான் அமமுக நிலைப்பாடு” என்றார்.