புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் சித்திரை திருநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டமன்றத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “புதுச்சேரியில் கடந்த 13 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டுதான் தற்போதைய முதலமைச்சர் ரங்கசாமியால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, புதுச்சேரி வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது.
இந்த நிகழ்ச்சியை அரசியல் என்பது இல்லாமல் அன்பால் எல்லோரும் இணைந்து கொண்டாடுவோம். நம்முள் கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் விழாக்களை அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டும். அதுதான் தமிழ் கலாச்சாரம், புதுச்சேரி கலாச்சாரமும். சில நேரங்களில் சில மாறுதல்கள், வேற்றுமைகள் வரலாம். ஆனால் அவற்றையெல்லாம் ஒரு சாதாரண விஷயமாக மறந்து அனைவரும் ஒற்றைக் குறிக்கோள் மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும்” என்று பேசினார்.
இந்த விழாவில் தமிழரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் சிலம்பாட்டம், கரகாட்டம், கிராமிய நடனம், பம்பை, உடுக்கை, பொய்க்கால் குதிரை போன்ற நடனங்கள் நிகழ்த்தப்பட்டன. நிகழ்ச்சி முடிந்து விருந்தினர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. அதில், சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டது.