சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனர்களுக்கு எச்சரிக்கையுடனான அதிர்ச்சிதகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. அதனோடு வாட்ஸ் அப்பின் சமீபத்திய வெர்சனை பயனாளர்கள் டவுன்லோட் செய்து கொள்ளும்படியும் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
அப்படி என்னதான் அந்த எச்சரிக்கை
அதாவது முன்பின் தெரியாத எண்ணில் இருந்து ஏதேனும் வீடியோக்கள் வந்தால் அதனை பதிவிறக்கம் செய்ய கூடாது என்பதே அந்த எச்சரிக்கை ஆகும். சமீபத்தில் பெகாசஸ் என்ற மால்வேரை பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் குறிப்பிட்ட நபர்களின் வாட்ஸ்அப் தகவல்களை ஹேக் செய்ய முற்பட்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியிருந்தது.
ஆனால் பெகாசஸ் மால்வேர் குறித்த எச்சரிக்கைகள் முடிவதற்குள் தற்பொழுது மற்றொரு மல்வேர் குறித்த அதிர்ச்சி தகவலை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டதோடு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
ஐசிஆர்டி எனப்படும் இந்தியன் கம்ப்யூட்டர் ரெஸ்பான்ஸ் டீம் வாட்ஸப்பில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை சுட்டிக் காட்டியுள்ளது. அந்த புதிய மால்வேரானது எம்பி4 (mp4) ஃபைல் வடிவத்தில் அதாவது வீடியோ ஃபைல் வடிவத்தில் ஹேக் செய்ய முடிவெடுக்கப்படும் பயனர்களின் எண்ணிற்கு வீடியோவாக அனுப்பப்படும். இந்த வீடியோ மெசேஜை ஓபன் செய்ததும் போன் ஹேக்கரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். இதன் மூலம் அந்த நபரின் வாட்ஸ்அப் அக்கவுண்டின் உரையாடல், புகைப்படம், போனில் உள்ள தகவல்களை திருட முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் எனப்படும் இரண்டு தளத்தினை சேர்ந்த பயனாளர்களையும் தாக்கும் என வாட்ஸ்அப் நிறுவனத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தப்பிக்க என்னதான் செய்யவேண்டுமாம்
நம்மில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் அநேகமானவர்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட் எண்ணிற்கு வரும் வீடியோக்களை டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷனை ஆன் செய்து வைத்திருப்பார்கள். அதாவது 'ஆட்டோமேட்டிக் வீடியோ டவுன்லோட் ஆப்சன்'. அப்படி வைத்திருந்தால் நமக்கு தெரிந்த எண்ணோ தெரியாத எண்ணோ எந்த எண்ணில் இருந்து வீடியோ வந்தாலும் ஆட்டோமேட்டிக்காக டவுன்லோட் ஆகிவிடும்.
அப்பொழுது சம்பந்தப்பட்ட பயனாளர்களுக்கு அனுப்பப்படும் அந்த மால்வேர் வீடியோவானது ஆட்டோமேட்டிக்காக நமது அனுமதி இன்றியே டவுன்லோட் ஆகிவிடும். இதனால் மொபைலில் இருந்து தகவல்கள் திருடப்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆட்டோமேட்டிக் வீடியோ டவுன்லோட் ஆப்ஷனை ஆப் செய்து வைக்கவேண்டும், தெரியாத எண்ணிலிருந்தோ அல்லது சந்தேகம் ஏற்படுத்தும் எண்ணிலிருந்தோ வரும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும் வாட்ஸ்அப் நிறுவனத்தால் எச்சரிக்கையுடன் அறிவுறுத்தப்பட்டுள்ளது.