உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் இருந்துவந்த நிலையில், உட்கட்சி பூசலால் அவர் தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திராத் சிங் ராவத் உத்தரகண்ட் மாநில முதல்வராக்கப்பட்டார்.
இந்தநிலையில், முதல்வராக பதவியேற்ற திராத் சிங் ராவத், நான்கே மாதங்களுக்குள் தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர், முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தலில் நின்று வெல்ல வேண்டும். அதன்படி திராத் சிங் ராவத், செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் உத்தரகண்ட் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். செப்டம்பர் 10க்குள் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் அறிவிக்காமல் இருந்துவருகிறது. கரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து, திராத் சிங் ராவத் தனது முதல்வர் பதவியை நேற்று (02.07.2021) இரவு 11.15 மணியளவில் இராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, பாஜக புதிய முதல்வரை நியமிக்கவுள்ளது. அதேநேரத்தில், இடைத்தேர்தல் நடைபெற்றால் திராத் சிங் ராவத் வெல்லமாட்டார் என்பதால்தான் முதல்வரை மாற்ற பாஜக முடிவு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.