வந்தே மாதரத்திற்கு எழுந்து நிற்காவிட்டால் வாக்குரிமையைப் பறிக்கவேண்டும்! - சிவசேனா எம்.பி
வந்தே மாதரம் பாடலை முன்னிறுத்தும் வகையில் நாடு முழுவதும் ஆளும் அரசு தரப்பில் பல பிரச்சாரங்கள் முன்னிறுத்தப் படுகின்றன. இந்நிலையில், சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர், தேசப்பாடலான வந்தே மாதரம் இசைக்கப்படும் பொழுது, எழுந்து நிற்காத அரசியல்வாதிகளின் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார்.
சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான சஞ்சய் ராவத் என்பவர் பேசுகையில், ‘நமது நாட்டில் வந்தே மாதரம் பாடலின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியும், இங்கு வந்தே மாதரம் பாடலைப் பாட யாரும் முன்வருவதில்லை. அரசியல்வாதிகள் யாரும் வந்தேமாதரம் பாடல் இசைக்கும் போது எழுந்து நிற்கவில்லை என்றால், அவர்களது வாக்குரிமை பறிக்கப்படவேண்டும். மேலும், அவர்களது பதவியும் பறிக்கப்படவேண்டும்.
இந்த நாட்டில் மாடுகள் பாதுகாப்பிற்கு ஒரு சட்டம் இருப்பதுபோல், வந்தே மாதரம் பாடலைப் பாதுகாப்பதற்கும் ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அனுரங்காபாத்தில் உள்ள அரசு அலுவலகத்தில், அனைத்திந்திய மஜிலிஸ்-இ-இட்டஹாதுல் முஸ்லிமீன் என்ற கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படும் போது எழுந்து நிற்காமல் இருந்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் அவையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட கண்டனங்களின் பிரதிபலிப்பாக சஞ்சய் ராவத் பேசியிருக்கிறார்.
- ச.ப.மதிவாணன்