
தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக காவிரியில் கர்நாடகா சார்பில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என டெல்லியில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 87வது கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் கர்நாடகா சார்பில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறக்காததைக் கண்டித்து தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் காவிரி விவகாரம் தீவிரமடைந்துள்ளது. அதே சமயம் நேற்று கர்நாடகாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதற்கிடையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டத்தில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது எனக் கர்நாடகா தரப்பு அதிகாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு தரப்பு அதிகாரிகள் சார்பில் கர்நாடக அணைகளில் 50 டி.எம்.சி நீர் இருப்பதால் 12 ஆயிரத்து 500 கன அடி நீரைக் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு அதாவது அக்டோபர் 15 ஆம் தேதி வரை 3000 கன அடி நீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு சீராய்வு செய்ய வேண்டும் எனக் காவிரி மேலாண்மை வாரியத்தில் கர்நாடகா மேல் முறையீடு செய்துள்ளது. மேல்முறையீட்டு மனுவில், “தற்போதைய சூழலில் தண்ணீர் திறக்க முடியாத நிலையில் இருக்கிறோம். மேலும் மேகதாது அணை விவகாரம் குறித்தும் ஆணையத்தில் விவாதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.