குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடையவிருக்கும் நிலையில், அதற்கான தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இதில், பா.ஜ.க. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தரப்பில் பொதுவான வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. முதலில் அதற்கான முன்னெடுப்பை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்திருந்தார். இது தொடர்பாக கடந்த 15ஆம் தேதியன்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்த அனைவரும் விருப்பம் தெரிவித்த நிலையில், அவர் மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து, காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அல்லது காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சி வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்க சரத் பவார் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகள் பங்கேற்கின்றனர்.