புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவல்
புதுவை அ.தி.மு.க.வை பொறுத்தவரை முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் புரட்சி தலைவி அம்மா அணி செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அம்மா அணியில் மாநில செயலாளர் புருஷோத்தமன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டி.டி.வி. தினகரன் அணி என பிரிந்த போது எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் தினகரனுக்கு ஆதரவாக இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு டி.டி.வி. தினகரன் மதுரை அருகே உள்ள மேலூரில் பொதுக்கூட்டம் நடத்திய போது புதுவை மாநில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
இந்த நிலையில் கடலூர் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை புதுவை வழியாக சென்றார். கோட்டக்குப்பம் எல்லை பகுதியில் அ.தி.மு.க. மாநில செயலாளர் புருஷாத்தமன் வரவேற்பு அளித்தார். மரப்பாலம் சந்திப்பு அருகில் புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் வரவேற்று சால்வை அணிவித்தனர்.