நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட 141 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 16ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையால் இப்போது நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த வேலையில்லாத் திண்டாட்டமே நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறலுக்கு காரணம். இந்திய மக்கள் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக வேலையின்மை திண்டாட்டம் இருக்கிறது. மோடியின் கொள்கைகள் வேலையின்மை பிரச்சனைக்குத் தீர்வை தரவில்லை” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று (19-12-23) பா.ஜ.க எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி கூறியதாவது, “நாடாளுமன்ற அத்துமீறலை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அத்துமீறலை வன்மையாக கண்டிக்கிறோம். ஜனநாயகத்திலும், ஜனநாயக நடைமுறைகளிலும் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் அதைக் கூட்டாக கண்டித்திருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக நாடாளுமன்ற அத்துமீறலை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கின்றன. இந்த சம்பவத்தை நியாயப்படுத்த முயற்சி நடக்கிறது. ஜனநாயக பண்புகளில் நம்பிக்கை உடைய ஒரு கட்சி, அதை எப்படி, வெளிப்படையாகவோ அல்லது ரகசியமாகவோ நியாயப்படுத்த முடியும்?.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியால் எதிர்க்கட்சிகள் நிலைகுலைந்து போயுள்ளன. அந்த விரக்தியின் காரணமாக தான் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. ஆனால், பா.ஜ.க எம்.பி.க்கள் சுயகட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செயல்பாட்டை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த அரசை தூக்கி எறிவது தான் எதிர்க்கட்சிகளின் முக்கிய குறிக்கோள். ஆனால், நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்வது தான் இந்த அரசின் குறிக்கோள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எண்ணிக்கை குறையும். பா.ஜ.க.வின் பலம் அதிகரிக்கும்” என்று கூறினார்.