அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றன. அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2 ஆவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். இதில் 26 எதிர்க்கட்சிகளின் சார்பாக இந்த கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA- INDIAN NATIONAL DEVELOPMENTAL INCLUSIVE ALLIANCE) எனப் பெயர் சூட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் மூன்றாவது இரண்டு நாள் கூட்டம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 28 கட்சிகளைச் சேர்ந்த 65 தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது இந்தியா கூட்டணி, ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை உருவாக்கி அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மேலும், இந்தக் கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரஸுக்கும் அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டு அவை தீர்க்கப்பட்டு வருகின்றன. அடுத்த வருடம் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தனர்.
இந்த நிலையில், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் தேதியை, கடந்த மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியா கூட்டணி சமீப காலமாக வலுப்பெறாமல் இருப்பதற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
பீகார் மாநிலம், பாட்னாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று (02-11-23) பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் நிதிஷ்குமார் பேசியதாவது, “ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிப்புக்கு பிறகு காங்கிரஸ் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. மாநில தேர்தல்களில் மட்டும் காங்கிரஸ் கவனம் செலுத்தி வருகிறது. இதனால், இந்தியா கூட்டணியின் செயல்பாடுகள் வேகம் பெறாமல் தொய்வடைந்துள்ளது. பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்றி நாட்டை காப்பாற்றுவதற்காக இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் எனக் கூட்டணி கட்சியினர் ஒப்புக்கொண்ட போதிலும் காங்கிரஸ் கட்சி 5 மாநில தேர்தல்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறது. தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த கூட்டங்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று பேசினார்.