துபாயிலிருந்து 191 பேருடன் கேரளா வந்த விமானம் தரையிறங்கும் போது, விபத்துக்குள்ளாகிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு கோழிக்கோடு கரிப்பூர் டேபிள் டாப் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, ஓடுதளத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீர் விபத்துக்கு உள்ளானது. இந்த கோரவிபத்தில் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்தது. இந்த விபத்தில் இதுவரை 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விமானத்தின் கறுப்புப் பெட்டி தற்போது கிடைக்கப் பெற்றதை அடுத்து விபத்துக்கான காரணம் குறித்து அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யூஜின் யூசப் என்பவர் விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, இந்த விபத்து வெறும் இரண்டே நொடிகளில் நடந்து முடிந்தது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியாக ஆரம்பித்த பயணம் சோகமானதாக நிறைவடைந்ததுள்ளது என்று தெரிவித்துள்ளார்.