காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைமை விவகாரத்தில் விரைவில் உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என கபில் சிபல், சசிதரூர், குலாம் நபி ஆசாத், பிருத்விராஜ் சவுகான், ஆனந்த் சர்மா உள்ளிட்ட அக்கட்சியின் 23 தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். மேலும் நேரு குடும்பத்தை அல்லாத ஒருவர் தலைவராக நியமிக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் வலியுறுத்தினர். இந்நிலையில், இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என்றும், சோனியா- ராகுல் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே மூத்த தலைவர் காங்கிரஸ் தலைமைக்கு எழுதிய கடிதம் அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கடிதம் எழுதியதில் முக்கிய தலைவரான குலாம் நபி ஆசாத் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள காங்கிரஸ் குழு அறிக்கையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத் விடுவிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் தலைவருக்கு துணையாக செயல்பட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு பேர் கொண்ட அந்த குழுவில் ஏ.கே. அந்தோனி, அகமத் படேல், அம்பிகா சோனி, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் மற்றும் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.