இந்தியாவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்க்ளுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கிவருகிறது. இந்த கருப்பு பூஞ்சை பாதிப்பு நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த நோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் கருப்பு பூஞ்சை நோயை கண்டுபிடிப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிக்காமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், கரோனா பாதித்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்றும் மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.
கருப்பு பூஞ்சை வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை குறித்து பேசியுள்ள எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா, "கரோனா நோயாளிகளுக்கு பூஞ்சை தொற்று ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இது சார்ஸ் வைரஸ் பரவியபோதும் ஒரளவிற்கு கருப்பு பூஞ்சை ஏற்பட்டது. கரோனாவுடன் உடன் கட்டுப்பாடற்ற நீரிழிவு மியூகோமிகோசிஸின் (கருப்பு பூஞ்சையின்) அதிகரிப்புக்கு வழிவகுக்கும். கருப்பு பூஞ்சை பாதிப்பை தடுப்பது குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டும். அதற்கு மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை. இரத்ததில் சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்த வேண்டும். ஸ்டெராய்டுகள் எடுத்துக்கொள்பவர்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை தவறாமல் கண்காணிக்க வேண்டும், மேலும் ஸ்டெராய்டுகளை எப்போது, எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட்டால், என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பது குறித்து பேசியுள்ள மேடந்தா மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் நரேஷ் ட்ரேஹான், "கரோனாவுடன் தொடர்புடைய கருப்பு பூஞ்சையின் முதற்கட்ட அறிகுறிகள், மூக்கில் வலி / மூச்சுத்திணறல், கன்னத்தில் வீக்கம், வாய்க்குள் பூஞ்சை படர்தல், கண் இமைகளில் வீக்கம் போன்றவை. இதற்கு விரைவான மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது" என கூறியுள்ளார்.