கவுரி லங்கேஷ் கொலைவழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியிடம் உண்மை அறியும் சோதனை நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூத்த பத்திரிகையாளரும், இந்துத்வ எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் சென்ற ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி பெங்களூருவில் உள்ள அவரது வீட்டின் முன்பாக மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மிக மோசமான இந்தப் படுகொலை குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வு பிரிவுக்கு கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சி.ஐ.டி. அதிகாரிகள் இதற்கு முன்னர் கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் கல்புகர்கி ஆகியோரின் கொலை வழக்குகளோடு கவுரி லங்கேஷின் கொலைவழக்கும் ஒத்துப்போயுள்ளது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்து யுவசேனா அமைப்பின் நிர்வாகி நவீன்குமார் (37) என்பவருக்கு இந்தக் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரைக் கைதுசெய்த சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதுகுறித்து சி.ஐ.டி. உயரதிகாரி அனுசேத் கூறுகையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நவீன்குமாரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக அகமதாபாத்தில் உள்ள சோதனை நிலையத்தில் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் நவீன்குமாரை நடத்த இருக்கிறோம். இந்த சோதனைக்குப் பிறகு கவுரி லங்கேஷ் கொலைவழக்கில் பல தகவல்கள் கிடைக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.