மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான தேடல்களுக்கும், உணர்வுப்பூர்வமான உரிமை மீட்பிற்கான போராட்டங்களுக்கும் அதிகார வர்க்கம் என்றுமே கற்பிப்பது மரணம் எனும் கொடிய பாடத்தைத்தான் என்பதற்கு நேற்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்விக்கப்பட்ட துப்பாக்கிச் சூடே இரண்டாவது சாட்சி. முதல் சாட்சி நமக்கு மறந்துவிட்ட ஒன்று.
ஆம், 1999ஆம் ஆண்டு 17 பேரின் உயிரை பலிகொண்ட மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் போராட்டம்தான் அது. என்றும்போல் அன்றும் சூரியனுடன் பொழுது விடிந்தது, 1999-ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் நாள் திருநெல்வேலியில். அன்றும் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மக்கள் கோரிக்கையுடன் சென்றனர். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் அடித்தட்டு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டும் முன்பு நடந்த போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மனு கொடுக்கச் சென்றனர். அந்தப் போராட்டத்தில் அப்பொழுது சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்த, தமாகாவைச் சேர்ந்த எஸ்.பாலகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் முன்னின்று வழிநடத்தினர். அவர்கள் கேட்டது, 70 ரூபாய் எனவிருக்கும் தினக்கூலியை 100 ரூபாய் என உயர்த்தவேண்டும். எட்டு மணி நேர வேலை, தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் விடுப்பு. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 625 தேயிலை தோட்ட தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும், இவைதான்.
ஒன்று திரண்ட மக்கள், ஆட்சியர் அலுவலகத்திற்கு சற்று தூரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். திறந்த ஜீப்பில் சென்ற தலைவர்கள், தங்களை மட்டுமாவது உள்ளே சென்று மனு கொடுக்க அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். அனுமதிக்காததால் போராட்டக்காரர்களுக்கும் போலீஸுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிலர், அருகே இருந்த தாமிரபரணி நதிக் கரையில் இறங்கி வேறு வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். ஆத்திரமடைந்த போலீசார், அவர்களை ஓட ஓட விரட்டித் தாக்கினர். மக்கள் செய்வதறியாது சிதறியடித்து ஓடினர். ஒரு பக்கம் மதில் சுவர், ஒரு பக்கம் தாமிரபரணி ஆறு போலீசாரின் தடியடியை சமாளிக்க முடியமால் தப்பிக்க வழியின்றி ஆற்றுக்குள் ஓடினர் மக்கள். அந்தத் தாக்குதலில் போலீஸ் தடியை மட்டும் பயன்படுத்தவில்லை, கற்களை எடுத்து மக்கள் மேல் எறிந்தனர். செங்கலை எடுத்து வீசினர். இந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத மக்கள், திசை தெரியாது ஆற்றுக்குள் இறங்கி ஓட, ஆற்றின் மறுகரையிலும் நின்று தாக்கியது போலீஸ். வலிக்கு பயந்து துடித்து ஓடிய பெண்களும் குழந்தைகளும் உயிரை விட்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி, தாமிரபரணி ஆற்றில் இறங்கி விக்னேஷ் என்ற சிறுவன், அவனது தாய் உட்பட பதினேழு பேர் ஆற்றில் மூழ்கி இறந்து போனார்கள். 500 பேர் படுகாயமடைந்தனர். 30 ரூபாய் உயர்த்திக் கேட்டதற்கு உயிரைப் பறித்து தமிழகத்தையே உலுக்கியது அந்த மாஞ்சோலை படுகொலை.
உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் வாங்க மறுக்க, அரசே அவர்களை புதைத்தது. இத்தனை கலவரத்துக்குப் பின் தொழிலாளர்களின் ஊதியம் 130 ரூபாய்க்கும் மேல் உயர்த்தப்பட்டது, சிறையிலிருந்த தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அனுமதியின்றி நுழைந்து முற்றுகையிட முயன்றதால்தான் போலீஸ் தடுத்தது என்றும் வெடித்த வன்முறையை கட்டுக்குள் வைக்கவே தாக்குதல் நடத்தியது என்றும் விளக்கமளித்தது அப்போதைய திமுக அரசு. பின்னர், போராடிய கட்சிகளும் ஆண்ட கட்சியும் பின்னர் சேர்ந்து கொண்டன. போராட வந்து அவர்கள் விட்ட உயிரும், அந்த சம்பவம் ஏற்படுத்திய பயமும் அப்படியே இருந்தது. நேற்று, ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் அரசு இதே காரணம்தான் சொல்லியது. கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தார்கள், அடித்து நொறுக்கினார்கள், அதனால் சுட்டோம் என்கிறது. நிவாரணம் அறிவித்துள்ளது. அமைதியாக சுமூகமாக சென்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையும் இறுதியில் வன்முறை நிகழ்த்தி, பயத்தைக் கொடுத்து முடித்துவைத்தது போலீஸ், அதன் ரிமோட்டை இயக்கும் அரசு. இப்படி, மக்கள் எழுச்சியுடன் போராட வந்தால் பயம் காட்டுவதுதான் அரசுகளின் வாடிக்கை. அதை மீறி, வாழ்வாதாரங்களைப் போராடிக் காப்பதுதான் தேவை.